KodaiMercury

testPetition post

நகர்ப்புறத்தில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், வெள்ள பிரச்சனையை ஒரு பொறியியல் சவாலாகவோ, தொழிற்நுட்ப கேள்வியாகவோ மட்டுமே விவாதிக்க படுகிறது. தீர்வும் இந்த இரண்டு துறையில் தான் இருக்கும் என்று நம்பிக்கிறோம். பொறியியல் அல்லாத மற்ற காரணிகளை கணக்கில் எடுப்பது இல்லை. உதாரணத்திற்கு, ஒரு நகர்ப்புற சூழலின் இயற்கை தாக்கங்களை தாங்கும் திறனை குறைப்பதில் வளர்ச்சி கொள்கைகளின் பங்கு என்ன? புயல், குடிநீர் பற்றாக்குறை, வெப்ப தாக்கல், கனமழை போன்ற தீவிர நிகழ்வுகளை தாங்கும் விரித்திரனை இழக்காமல் ஒரு நகரம் நிலைபேறுடைய வளர்ச்சியின் பாதையில் போகமுடியுமா? ஒரு நகரத்தின் வெள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் திட்டமிடல், மழைநீர் ஓட்டத்தின் கணக்கீடுகள் மற்றும் மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பு போன்ற நுணுக்கங்களைவிட முக்கியத்துவத்துடன், நம்முடைய முதன்மை கலாச்சாரத்தில் எதை மதிக்கிறோம், எதை பயனற்றதாக பார்க்கிறோம் என்ற கருத்துசாயல்களின் பங்கு அதிகம்.

சோழர்கள் காலத்திலிருந்து தமிழ் நிலப்பயன்பாட்டு வர்ணிப்பில் புறம்போக்கு என்கிற வார்த்தை பயன்படுத்தி வந்துள்ளது. இந்த வார்த்தை, கடற்கரை, நீர்நிலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்ற பங்கு-பயன்பாட்டிலுள்ள இடங்களை வர்ணிக்கும். இவ்விடங்கள் போக்கு (அதாவது வருவாய் ஆவணங்களுக்கு) புறம் (வெளியே) இருப்பதனால் புறம்போக்கு என்று கூறப்படும். அரசனோ, அரசோ, போறோம்போக்கு இடங்களிலிருந்து எந்த விதமான வரிகளும் எதிர்பாக்க முடியாது. அதுனாலவோ என்னவோ, ஆங்கிலேயர்களின் சொத்து உருவாக்கும் முயற்சியில் புரோம்போக்கு இடங்கள் மதிப்பற்றதாக கருத்தப்பட்டிருக்கலாம். பேச்சுவழக்கிலும் கூட, புறம்போக்கு என்கிற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது. சென்னை பாணியில் புறம்போக்குனா வேஸ்டு. ஒண்ணுத்துக்கும் உதவாத இடங்களையோ மனிதர்களையோ கரித்து கொட்ட பயன்படும் வார்த்தை.

உண்மையில், புறம்போக்கு தான் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கான அஸ்திவார தூண்கள். புரோம்போக்கு இல்லை என்றால், நாம் இல்லை. இதை கெட்ட வார்த்தையாக மாற்றி, புறம்போக்கு இடங்களின் மதிப்பை குறைத்து, ஏரிகளும், மெய்க்கால் நிலங்களிலும், கடல் மற்றும் கடற்கரையிலும், உப்பங்கழி மற்றும் கழிவெளிகளிலும் கட்டிடங்களும் வளர்ச்சி என்ற பெயரில் பேரழிவு உருவாக்கும் திட்டங்களையும் கொண்டு வருவதை தான் நவீன நாகரீகம் என்று சொல்கிறோம்.

ஆங்கிலேயர்களாவது இடங்களை தான் மதிப்பற்றதாக பார்த்தார்கள். புதிய தாராளவாத இந்தியாவின் பார்வையில் புறம்போக்கும் வேஸ்டு, புறம்போக்கை பயன்படுத்தும் சமுதாயங்களும் வேஸ்டு, புறம்போக்கு நமக்கு கொடுக்கும் இயற்கை சேவைகளும் இதர பொருள்களும் வேஸ்டு. ஒரு நகரத்தின் பேரழிவு காப்புத்திறனை வலுப்படுத்தும் முயற்சிகளில் கேட்கப்படாத கேள்விகள் பல. நகர்ப்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கு ஏன் புறம்போக்கு இடங்களை தேடி போகிறார்கள்? “மதிப்பிழக்கப்பட்ட” மக்கள் ஏன் “மதிப்பிழக்கப்பட்ட” இடங்களை தேடி போகிறார்கள்? இந்த இடங்கள் மற்றும் மக்களின் அசல் மதிப்பு என்ன?

“சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள்” என்கிற வார்த்தையை கேட்ட உடன், ஓரங்கட்டப்பட்டவர்களால் ஆறுகளும், கால்வாய் ஓரம் கட்டப்பட்ட குடிசைகள் மட்டும் தான் கண் முன் காட்சிதரும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து இரும்பும் கண்ணாடியால் கட்டப்பட்ட IT கட்டிடமோ, உலக தர ஏர்போர்ட்களோ, கால்வாயை அடைத்து தூண்களில் பறக்கும் ரயில்களோ, ஏரியில் கட்டப்பட்ட நீதிமன்றங்களோ கண் முன் வராது. “சட்டவிரோதமான” ஆக்கிரமிப்பு என சொல்வதில் சட்டப்படியான ஆக்கிரமிப்புகள் உண்டு என்கிற ஒரு கருத்து வெளி வருகிறது. அனுமதி வாங்கி கட்டப்பட்ட ஆக்கிரமிப்பினால் வெள்ளம் ஏற்படாதா? நீதிமன்றத்தினால் அனுமதிக்க பட்ட ஆக்கிரமிப்பை வெள்ள நீர் பிரதர்ஷணமாக சுற்றி போகுமா? மனிதனின் சட்டத்தில் அனுமதிக்கும், உரிமதுக்கும் மட்டும் தான் மதிப்பு. இயற்கையின் சட்டத்தில் அனுமதி இருப்பது, இல்லாமல் இருப்பது முக்கியமில்லை. கட்டிடம் கட்ட பட்ட இடம் தான் முக்கியம்.

புறம்போக்கு என்ற வார்த்தைக்கு மதிப்பு குறைந்ததுனாலவும், புறம்போக்கு இடங்களை இழந்ததுனாலதான் சென்னையில் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. தாராளமயமான பொருளாதார கொள்கையின் பார்வையில் வேஸ்டா இருக்கிற சதுப்புநில கழிவெளி புறம்போக்கிற்கு IT கட்டிடங்கள் மதிப்பும் அழகும் கொடுக்கும். அடையாறு ஆற்றின் இயற்கை சேவைகள், வெள்ள பாதுகாப்பு சேவைகளோட சென்னை airport-இன் இரெண்டாவது ரன்வெவிற்கு மதிப்பு அதிகம். கொசஸ்தலையாரின் கடற்கழி புறம்போக்கில் மண்ணும் நிலக்கரி சாம்பலும் கொட்டி சாகர்மாலா (Sagarmala) என்ற பெயரில் துறைமுகத்திற்கு நீரிலிருந்து நிலம் உருவாக்குவது தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவையாக கருதப்படுகிறது.

நாம் பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டிய புறம்போக்கு இடங்களை குப்பைத்தொட்டிகளாகவும், கேவலமான கட்டிடங்களை கட்டுவதற்க்கான ரியல் எஸ்டேட்டாகவும் பார்க்கிறோமே, நம்மளை இயற்கை ஏன் தாக்காது? தாக்கும். தாக்கணும். இன்னும் தாக்கும். இன்னும் தாக்கணும்.

வளர்ச்சியென்ற பெயரில் நம் நகரத்தின் நீரியல் கட்டமைப்பை முறையாக, திட்டமிட்டு கலைத்திருக்கிறோம் கலைத்துக்கொண்டு வருகிறோம். சென்னை மாநகரின் 2026 வளர்ச்சி திட்டத்தில் குடியிருப்பு பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகம் ஆக இருக்கு. தொழிற்துறையிற்கான நிலம் 6563 ஹெக்டரிலிருந்து 10,690 ஹெக்டருக்கு அதிகரிக்க இருக்கிறது. அதே நேரத்தில், விவசாய பயன்பாட்டிலுள்ள நிலம் 42 சதவீதம் குறையும். காடுகள், மலைகள், நீர்நிலைகளாக இருக்கிற இடங்கள் 56,000 ஹெக்டரிலிருந்து பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

திறந்த இடங்களின் பரப்பளவு குறைந்து, கட்டப்பட்ட இடங்களின் பரப்பளவு அதிகரித்தால் தரையில் விழுந்து ஓடும் மழைநீரில் அளவு அதிகரிக்கும். அதை நீர்நிலைகளுக்கோ, கடலுக்கோ கொண்டு சேர்க்க வடிகால்களின் கொள்ளளவை அதிகம் ஆக்க வேண்டும். முரணாக,  நகரத்தின் பெறுன்பங்கு விரிவாக்கமும் இயற்கை வடிகால்களை விழுங்கி தான் நடக்கயிருக்கு.

 

2026  வளர்ச்சி திட்டத்தில், வட சென்னையின் எண்ணூர் பகுதியில் 1000 ஹெக்டர் “சிறப்பு மற்றும் அபாயகரமான” தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் இடம் ஈரநிலங்காளானது  — உப்பளங்கள், மீன் குளங்கள், அலையாத்தி காடுகள், ஆறு மற்றும் ஆற்றோரங்கள். காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி திட்டத்தில் எண்ணூர் கடற்கழி போறோம்போக்கில் 1000 ஏக்கர் நீர்நிலையை நிலமாக மாற்றுவதாக வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முதுகெலும்பு இல்லாத மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கடற்கரை மண்டல ஒழுங்குமுறை குழுமத்திடமிருந்து அனுமதி கிடைத்துவிடும். அனுமதி இருந்தால் கூட, இந்த திட்டம் நிறைவடைந்தால், வட சென்னையின் மக்கள் நெருக்கடியான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள தாக்கம் தீவிரமாகும். ஒரு முறை துவங்கிவிட்டால், இச்செயல்களின் பின்விளைவுகளை பொறியியல் தலையீடுகளினால் தவிர்க்கவோ, கையாளவோ முடியாது.

இந்த தரக்குறைவான கலாச்சாரம் மாறி, எப்போ நாம் புறம்போக்கு பகுதிகளுக்கு தக்க மரியாதை கொடுக்கிறோமோ, அப்போ தான் நமக்கு வெள்ள பிரச்சனையோ, குடிநீர் பற்றாக்குறையோ, புயல் பாதிப்போ, வெப்ப தாக்கமோ இல்லாத இருக்கும். இயற்கையின் வடிகாலாக இருக்கும் ஆற்றை மூடி வணிக கட்டமைப்பு அமைத்து, அச்செயலின் பின் விளைவுகளிலிருந்து பொறியியலும் தொழிற்நுட்பமும் காப்பாற்றும் என நினைப்பது முட்டாள்தனம்.

புறம்போக்கை பாதுகாத்தால், புறம்போக்கு நம்மை பாதுகாக்கும்.