KodaiMercury

Press Release: Celebrities shun Unilever products, say #WontBuyUnilever (Tamil)

யூனிலிவரை புறக்கணிப்போம் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பிரபலங்கள்; யூனிலிவரின் இரட்டை கொள்கைகளுக்கு எதிராக நுகர்வோர் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

13 செப்டம்பர் 2015, சென்னை:

08880109020 என்கிற எண்ணுக்கு மிஸ்ட் கால் தந்து யூனிலிவரை புறக்கணிப்போம் என்கிற பிரச்சாரத்தை பிரபலங்கள் தொடக்கி வைத்தார்கள். கொடைக்கானல் வோண்ட் என்கிற மிக பிரபலமான வீடியோவின் தயாரிப்பாளரான ரதிந்தர் பிரசாத், நடிகர்கள் பாபி சிம்ஹா, ரோகிணி, கலைராணி உள்ளிட்டோர் இணைந்து இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள். யூனிலிவரின் பொருட்களான லைப்பாய், டவ், லிப்டன் டீ, பாண்ட்ஸ், லேக்மெ, ஹமாம், ஆக்ஸ் தியோ போன்ற பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டுமென்றும் jhatkaa.org/WontBuyUnilever என்கிற இணையத்தளத்தில் அது குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஜூலை 2015ல் வெளியிடப்பட்டு இணையத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த கொடைக்கானல் வோண்ட் என்கிற வீடியோ யூனிலிவருக்கு எதிரான கொடைக்கானலின் போராட்டத்தை கவனப்படுத்தியது. jhatkaa.org/unilever என்கிற தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இணைய கோரிக்கைக்கு 90,000க்கும் அதிகமானவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி யூனிலிவர் இரட்டை கொள்கையை கடைபிடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு கிலோ மண்ணுக்கு 25 மில்லிகிராம் பாதரசம் என்கிற அளவுகோலின் அடிப்படையில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதாக அது சொல்கிறது. ஆனால் கொடைக்கானலின் வனங்களையும் நீரையும் பாதுகாப்பதற்கு தேவைப்படும் அளவுகோலை விட இது 250 மடங்கு பலவீனமானது. இந்த அளவுகோலின் அடிப்படையில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் சுத்தப்படுத்துதலுக்கு பிறகும் மூன்றில் ஒரு பங்கு பாதரசக் கழிவு கொடைக்கானலில் தேங்கியிருக்கும் என்பதுதான் உண்மை. இந்த பாதரசம் சூழலில் கலந்து நீரையும் கோடையிலும் வைகையிலும் பிடிபடும் மீன் உணவு சாப்பிடுபவர்களையும் பாதிக்கும் என்று உள்ளூர்வாசிகள் அஞ்சுகிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளான பாம்பர் சோழர் மற்றும் பாம்பர் நதி உள்ளிட்ட இடங்களில் பாதரசக் கழிவு கலந்திருப்பது, ஜூன் 2015ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மீன் உணவு வளையத்தில் பாதரசக் கழிவுகள் அபாயகரமான அளவில் பெருகி மீன் உணவு உண்பவர்களை பாதிக்கக்கூடும். சிறுநீரகம், மூளை போன்றவற்றை பாதிப்பதுடன் பிறப்பில் கோளாறுகளையும் ஏற்படுத்துமளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது பாதரசம். பாதரச தொழிற்சாலையில் வேலை பார்த்த மகனை சிறுநீரகக் கோளாறுக்கு பலி கொடுத்திருக்கும் எஸ்தர் ராணி, பாதரசம்தான் தனது மகனின் மரணத்துக்கு காரணமோ என்று நினைக்கிறார். அவரது கதையை வாசிக்கவும் பகிரவும்:  jhatkaa.org/esthers-story

யூனிலிவர் தொழிற்சாலையில் பணிப்புரிந்த போது பாதரசம் தாக்கிய சுமார் 45 பேர் இறந்திருக்கிறார்கள். பணிபுரிந்தவர்களின் குழந்தைகளில் 25 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யூனிலிவரின் சுற்றுசூழல்  இனவெறிக்கு கொடைக்கானல் பலியாகிவிட கூடாது என்று செயற்பாட்டாளர்களும் அந்த பகுதி மக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். சுத்தப்படுத்துதலுக்கு கடுமையான நிர்ணயங்கள் வேண்டுமென்றும் அவர்கள் கோருகிறார்கள்.

யூனிலிவரை புறக்கணிப்போம் பிரச்சாரத்தில் பங்கு கொள்ள விரும்பும் நுகர்வோர் 08880109020 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  jhatkaa.org/WontBuyUnilever என்கிற இணையத்தளத்திலும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம். யூனிலிவரின் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் http://tinyurl.com/p7vh9ea என்கிற இணையத்தளத்தில் இருக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு  kodaimercury.orgஎன்கிற தளத்தை பார்வையிடவும்.

தொடர்புக்கு:

நித்தியானந்த் ஜெயராமன், சென்னை ஆதரவு குழு – 9444082401

கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்- 9841031730

ரசிதா தனேஜா, Jhatkaa.org – 07760052603