KodaiMercury

யூனிலீவரின் பாதரச நச்சும், முடிவற்று நீளும் இனவாதமும்

2001  ஆம் ஆண்டு. யூனிலீவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலை, அது இயங்கி வந்த பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கடை ஒன்றில் டன் கணக்கில் தன்னுடைய கழிவுகளை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்ததால் மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகளால் மூடப்பட்டது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர் பொக்கிஷமாக விளங்கும் இரண்டு நீர்தேக்க காடுகளின் மத்தியில் அமைந்திருந்த இந்த தொழிற்சாலை, இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் அழகிய மலை பகுதியான கொடைக்கானலில் இயங்கி வந்தது. இந்தப் பகுதியே பாதரசத்தால் மேலதிகமாக மாசுபட்டுள்ளது. சில இடங்களில் இயற்கையில் இருக்க வேண்டியதை விட 50,000 மடங்கு அதிகமான பாதரசம் இருக்கிறது.

பணியிடத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் பாதரச பாதிப்புக்கு ஆளாகி அவர்களுள் 20 பேர் ”பாதரச பாதிப்பு” நோய்களால் இறந்தும் போயிருக்கின்றனர். அவர்களின் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து, தொழிலாளர்கள், பகுதி வாழ் மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் யூனிலீவர் நிறுவனம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சுற்றுச் சூழலை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து போராடி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு, சென்னையை சேர்ந்த இசை கலைஞர் சோஃபியா அஷ்ரஃப் அவர்களின் ராப் இசையில் “கொடைக்கானல் வோண்ட்” என்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி யூனிலீவர் நிறுவனத்தை தன் நச்சு வரலாற்றை சீர் செய்ய நிர்பந்தித்தது. மார்ச்சு மாதம் 2016 ஆம் ஆண்டு, யூனிலீவர் தன் தொழிலாளர்களுடன் ஒரு உடன்படிக்கையை எட்டவும், 591 தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிர்பந்திக்கப்பட்டது. தற்போது தன் மீதான ஊடக கவனம் குறையவே, அந்நிறுவனம் மீண்டும்  இரட்டை வேடம் பூண ஆரம்பித்திருக்கிறது. மாசுபட்டுள்ள தொழிற்சாலை வளாகம் அது அமைந்திருக்கும் பாம்பார் ஷோலா எனப்படும், பசுமை காடுகளினுள் பாதரசத்தை கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.

இருப்பதிலேயே சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலை வளாகத்தை சர்வதேச தரத்திற்கு சுத்தம் செய்வதற்கு பதிலாக, யூனிலீவர் நிறுவனம் இதற்கு முன்னால் தோற்றப்போன ஒரு முறையை முன்னிறுத்தி சுத்தம் செய்ய போகிறேன் என்று சொல்வதின் மூலம் சுற்றுச் சூழலிலிருந்து அது களையவிருக்கும் பாதரசத்தை விட அதிகமான பாதரசத்தை அதுனுள் கசிய விடப் போகிறது. அது மட்டுமல்லாமல், யூனிலீவர் முன்வைக்கும் முறைப்படி சுத்தம் செய்ததன் பிறகும் வளாகத்தின் மண்ணில் இருக்கப் போகும் பாதரசத்தின் அளவு, பிரிட்டிஷ் கூட்டரசில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதரச அளவை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும். ”சுத்தம்’ செய்யப்பட்ட பிறகும் தொழிற்சாலை வளாகத்திலிருந்து தொடர்ந்து பாதரச நச்சு நீர் தேக்க காடுகளுக்குள் நுழைந்து மீன்கள், காட்டு உயிரினங்கள், நீர் போகும் வழியெங்கும் அதைப் பயன்படுத்தும் மக்கள் என அனைவரையும் பாதிக்கும். இன்னும் நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், யூனிலீவர் நிறுவனம் இந்தியாவில் செய்ய துணிந்துள்ள விஷயத்தை ஒரு போதும் ஐரோப்பாவில் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நெதர்லாந்தில் மண், தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஏற்புடைய அளவு என்று நிர்ணயித்துள்ள பாதரச அளவை விட 66 முறை அதிக பாதரசம் கொடைக்கானலில் இருக்கும்.

இது சுற்றுச்சூழல் இனவாதம்!

யூனிலீவர் இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஆதரவை பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் பணியினை மேற்பார்வையிட பொது மக்களை, பொதுவான அமைப்புகளை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்திலும், கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் வாதிட்டு வருகிறது.

உயர்தர சுத்தம் செய்யும் முறைகளுக்கான செலவு, யூனிலீவர் போன்ற ஒரு நிறுவனத்திற்கு அத்தனை பெரிய தொகை இல்லைதான் என்ற போதும் இந்நிறுவனம் மீண்டும் மீண்டும் மக்களையும், பூமியையும் விட தன் இலாபத்தையே முன்னிறுத்து செயல்படுகிறது.

யூனிலீவர் நிறுவனத்தின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே உலகளவு வேறுபாடுகள் இருக்கின்றன. தன்னுடைய சுற்றுச் சூழல் இரட்டை வேடத்தை யூனிலீவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மாசுபட்ட தொழிற்சாலை வளாகத்தை உயர்ரக தொழில்நுட்பத்தின் மூலம் சுத்தம் செய்ய உறுதியேற்க வேண்டும். மாசுபட்ட இடத்தை சுத்தம் செய்வதன் மூலம், வெள்ளைக்காரர்களின் உயிர்களுக்கு தரும் அதே மரியாதையை நமக்கும் தரும் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

தோற்றுப் போன சுத்திகரிப்பு நடவடிக்கை சோதனையோட்டங்கள்.

நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு, யூனிலீவர் தீர்வு நடவடிக்கைக்கான தனது மூன்று மாத சோதனையோட்டத்தை முடித்தது. அது வெற்றியென்று அறிவித்தது. சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு நிறுவனங்களுடனான தனது “நல்லுறவை” பயன்படுத்தி வேலையை துரிதப்படுத்தி, தொழிற்சாலை வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி நடந்தால் அது இன்னுமொரு பேரழிவாகத் தான் இருக்கும். ஏனென்றால் யூனிலீவரின் கூற்றுப்படியே அவர்கள் மேற்கொண்ட தொழில்நுட்பம் போதுமானதாக இல்லை.

முன்வைக்கப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கை திட்டம் நான்கு கட்டங்களைக் கொண்டது:

  1. மாசுபட்ட மண்ணை தோண்டி எடுப்பது
  2. மண்ணைக் கழுவுவது, சல்லடை செய்வது. அதன் மூலம் சொரசெரப்பான மண்ணில் இருந்து பாதரசம் அடங்கிய மெல்லிய மண்ணை பிரித்தெடுப்பது.
  3. பிரித்தெடுக்கப்பட்ட பாதரச மண்ணிலிருந்து ”வாக்கம் ரிடார்ட்” மூலமாக பாதரசத்தை பிரித்தெடுப்பது
  4. இம்முறையை செயல்படுத்தும் போது வெளியாகும் நீரை மாசில்லாமல் பதப்படுத்துவது.

இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களைத் தான் முதன்மை சுத்திகரிப்பு முறைகளாக முன்வைத்தனர். ஆயினும், யூனிலீவரின் தகவல்களின் அடிப்படையிலேயே மண்ணைக் கழுவுவதும், வாக்கம் ரிடார்ட் முறையும் தோல்வியில் முடிந்துள்ளன. 50 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் மண்ணைக் கழுவும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மாசுபட்டுள்ள மொத்த மண்ணில் கிட்டதட்ட 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மண்ணை இம்முறையின் மூலம் சுத்தம் செய்ய முடியாது.

“வாக்கம் ரிடார்ட்” சோதனை ஓட்டங்களை பொறுத்தவரை, கம்பனியின் தகவல் படியே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 11 தொகுப்புகளில் இரண்டு மட்டுமே தீர்வு நடவடிக்கையின் ஒப்புதல் அளவை எட்டியுள்ளது.

இந்த தகவல்களின் மூலம், மணல் சுத்தம் செய்யும் முறை எப்படி பாதரசத்தை அதை கழுவும் நீரில் கரைத்திருக்கிறது என்பதையும், அந்நீரை சுத்தம் செய்யும் ”கழிவு பதப்படுத்தும் ஆலையின் திறன்” நச்சுப் பொருளின் அளவுக்கும், அதிலிருந்து அகற்றப்பட வேண்டிய பாதரசத்தின் அடர்த்திக்கும் பொருந்தாத ஒன்றாக இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

மண்ணைக் கழுவும் முறையின் தோல்வி

மண்ணைக் கழுவுவதும், அப்படி கழுவப்பட்ட மண்ணை பல்வேறு கட்ட வடிகட்டுதலுக்கு உட்படுத்துவதும் பாதரசம் அடங்கிய மெல்லிசான மணலை சேகரிப்பதற்காக செய்யப்பட்டது.  பிரிக்கப்படும் மொற மொறப்பான மணலில்  தீர்வு நடவடிக்கைக்கு உட்படுத்த தேவையான அளவை விட குறைந்த பாதரசமே இருக்கும் என்பது தான் கணிப்பு. பாதரசம் அடங்கிய மெல்லிசான மணலில் இருந்து ஈரத்தை எடுக்கும் பொருட்டு அதை அழுத்தி ஈரத்தை எடுத்ததன் பிறகு இருக்கும் காய்ந்து போன மணல் கட்டிகளாக்கப்படும். ஈரத்தை எடுக்கும் போது வெளியாகும் நீரில் குறைந்த அளவு பாதரசமே இருக்கும் என்பதும் கணிப்பு. காய்ந்த கட்டிகளை சூடுப்படுத்தி, அதிலுள்ள பாதரசத்தை ஆவியாக்குவதன் மூலம் எச்சம் இருக்கும் மணலில் “ஏற்புடைய அளவிலான” பாதரசம் இருக்கும்.

யூனிலீவரின் ஆவணங்களின் படி மொத்தம் பாதரசம்-கலந்த மண் 70 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, கழுவப்பட்டு, சளிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பாதரசத்தின் அளவு கணக்கிடப்பட்டிருந்தது. அதில் மெல்லிசான துகள்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு 12 பில்டர் பிரஸ் கட்டிகள் கட்டியாக்கப்பட்டு “வாக்கம் ரிடார்ட்” முறைக்கு தயாராக்கப்பட்டது.

இந்த சோதனை ஓட்டத்தின் போது தாங்கள் பாதுகாப்புபடுத்தியதை விட அதிக பாதரசத்தை சுற்றுச்சூழலில் பரப்பியுள்ளனர். நுட்பமான தகவல்கள் உள்ள  மண் தொகுதிகளில் இருந்த பாதரசத்தில் 34% மட்டும் தான் கட்டியாக்கப்பட்டு பாதுகாப்புபடுத்த முடிந்தது. 56 சதவிகித பாதரசம் காற்றிலும், நீரிலும் கலந்து விட்டது.

முன்வைக்கப்பட்டிருக்கும் சுத்திகரிப்பு வரம்பு

ஒரு கிலோ மண்ணில் 20 மில்லிகிராம் பாதரசம் என்ற சுத்திகரிப்பு வரம்பை (20 மி.கி/கிலோ) யூனிலீவர் நிர்ணயித்துள்ளது. கொடைக்கானலில், மணலில் இயற்கையாக அமைந்துள்ள பாதரசத்தின் அளவு 0.001மி.கி/கிலோ. பிரிட்டிஷ் கூட்டரசின் சுற்றுப்புறச்சூழல் நிறுவனம், தனது நாட்டின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மணலில் பாதரசத்தின் அளவு 1 மி.கி/கிலோ என்ற அளவிலேயே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கனடாவோ, தனது நாட்டின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மணலில்,இதன் அளவு 6.6 மி.கி/கிலோ என்ற அளவில் இருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்துள்ளது. ஒருவேளை தொழிற்சாலை, எளிதில் பாதிக்கப்படக்கூடிய, நீரகக் காடுகள் போன்றவற்றிற்கு அருகில் இருந்தால் இந்த வரம்பு இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

இன்னும் தீவிரமான சுத்திகரிப்பு வரம்புகள் (முழு சுத்திகரிப்பு) சுற்றுப்புறச்சூழல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் காடுகளை பாதிக்கும் என்ற பிழையான வாதத்தை யூனிலீவர் முன்வைத்துள்ளது. பார்க்க. See https://www.unilever.com/Images/soil-remediation-note-update-on-7-april-2016_tcm244-479921_en.pdf

டவ், லைப்பாய், விஸ்க், ஓமோ, பெர்சில், சர்ப் எக்செல் மற்றும் டோமெக்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் யூனிலீவர் இந்த வாதத்தை முன்வைப்பது விநோதமானதாக இருக்கிறது. சுத்தமாக இருப்பது நல்லது என்றும், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் எல்லா வகையான கரைகளையும் அழிக்கும் என்றும், சொல்வதற்காக விளம்பர உத்திகளில் பல பில்லியன்களை செலவு செய்கிறது யூனிலீவர். தொழில்நுட்பத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்துதல், ரசாயனங்களைப் பயன்படுத்துதல், பாலிமர்கள்,என்சைம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் மூலமாக குழந்தைகளின் உடைகளில் உள்ள அழுக்கை அகற்றுவது குறித்துப் பேசுகிறது. ஆனால், கொடைக்கானல் காடுகள் என்று வரும் பொழுது, பாதரசக் கழிவுகளை வெளியேற்ற வழிவகை இல்லை என்று யூனிலீவர் நம்மிடம் கூறுகிறது.

யூனிலீவர் கூறியவைகளுக்கான பதில்கள்

  1. கொடைக்கானலில்,தான் பாதரசத்தைக் கொட்டவில்லை என்றும்அந்த தொழிற்சாலைப் பகுதியில் இருக்கக்கூடிய பாதரசம், சுற்றுப்புறச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள அதைச் சுற்றிய பகுதிகளுக்குஎந்தவித மாசுபடுத்துதலையும் ஏற்படுத்தாது என்றும் யூனிலீவர் கூறுகிறது.

யூனிலீவரின் ஆலோசக நிறுவனமான ”யூஆர்எஸ் டேம்ஸ் அண்ட் மூர்”, 2002-ஆம் ஆண்டில் செய்த ஆய்வின்படி, தற்பொழுது கொடைக்கானல் வன உயிர் காப்பகத்தின் பகுதியாக உள்ள பாம்பார் சோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 1.3 டன்கள் பாதரசத்தை யூனிலீவர் கொட்டியுள்ளது என்று தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. 440 கிலோ பாதரசத்தை உள்ளடக்கிய 43 டன்கள் அளவிலான பாதரசக் கழிவுகளை, பழைய பொருள் வியாபாரிகளிடம், சட்டத்திற்கு புறம்பான முறையில் யூனிலீவர் விற்றதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அப்படி விற்ற பாதரசக் கழிவில் 5.3 டன்கள் கொடைக்கானலின் சன நெரிசல்மிக்க ஒரு பகுதியில் உள்ள பழையபொருட்கள் கிடங்கில் கொட்டிவைக்கப்பட்டது 2001-ஆம் ஆண்டு தெரியவந்தது என்றும் அது குறிப்பிடுகிறது. இந்தக் குற்றத்திற்காகவே மாநில சுற்றுப்புறச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பு யூனிலீவரின் தெர்மாமீட்டர் தொழிற்சாலையை மூடியது.

காடுகளில் கொட்டப்பட்ட பாதரசத்தை அகற்ற இயலாது. அது நுண்ணிய தன்மை கொண்ட காட்டின் சுற்றுப்புறச்சூழல்மண்டலத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும், அது வன உயிர்களைப் பாதிக்கும், உணவுத்தொடரின் வழியே பரவும். மாசுபட்ட தொழிற்சாலையில் இருந்து பாம்பர் சோலை நீரகப் பகுதிகளுக்குள் இன்னமும் கசிகிறது பாதரசக்கழிவு நிரம்பிய வண்டல்.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், மீனில் பாதரசத்தின் பாதுகாப்பான வரம்பு அளவு 30 மைக்ரோ கிராம்/கிலோ என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் டிசம்பர் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, கொடைக்கானல் ஏரியில் பிடிக்கப்பட்ட மீன்களில், எட்டு மீன்களில் நான்கு மீன்களில் இருந்த பாதரசத்தின் அளவு 31.1 முதல் 41.9 மைக்ரோகிராம்/கிலோ என்று கண்டறியப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் கழிவுகள் கொட்டப்படும் பாம்பார் ஓடையில் இருந்து வரும் நீர் நிரம்பிய குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில் இதன் அளவு இன்னும் மிக அதிகமாக இருந்தது – அவை 94 முதல் 165 மைக்ரோகிராம்/கிலோ என்ற அளவில் இருந்தன. http://kodaimercury.org/high-mercury-levels-fish-kodai-lake-periakulam-ponds-iit-hyderabad-study-cautions-fish-consumers-2/

  1. பாதரசக்கழிவால் மாசுபட்ட பகுதிகள் செங்குத்தானமரங்கள் நிரம்பியஎளிதில் அரிமானத்திற்கு உடப்படக்கூடிய சரிவுகள் நிரம்பிய பகுதிகளாக இருப்பதால்இன்னும் தீவிரமான தர விதிமுறைகளைப் பின்பற்றுவது நுண்ணிய தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைவை பாதிக்கும் என்று யூனிலீவர் கூறுகிறது.

சுற்றுப்புறச்சூழல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிக்குள் உள்ள செங்குத்தான, அரிமானத்திற்குள்ளாகக் கூடிய சரிவுகளில் கடுமையான மாசுபாடு நிகழ்ந்திருக்கிறது என்பது தான் அங்கு குடியிருப்போருக்கும் சூழலியலாளர்களுக்கும் உள்ள கவலை. பாதரசக் கழிவின் வண்டல், எளிதில் அரிமானத்திற்கு உள்ளாகக்கூடிய சரிவுகளில் வழிந்து பாம்பர் சோலை நீரகப் பகுதிகளுக்குள் கசிந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சூழல், மெத்தனப் போக்கை அல்ல, சுத்திகரிப்புத் தரம் மற்றும் செயல்பாடுகளில் தீவிரத்தன்மையையே கோருகிறது. மாசுபட்டுள்ள இடத்தை சீர்செய்வதற்கும், மீள்கட்டமைப்பதற்கும் தக்க தொழில்நுட்பத்தையும், ஏற்ற செயல்முறைகளையும் யூனிலீவர் கண்டறிய வேண்டும், இந்தச் செயலாக்கத்தின் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க தக்கக் கண்காணிப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

  1. யூனிலீவர்,இதைச் சீர் செய்வதற்கு எந்த தர அளவுகோலையும் நாங்கள் முன்வைக்கவே இல்லை. பின் 20 – 25 மி.கி/கிலோ என்ற அளவு எங்கே வந்தது” எனக் கேட்கிறது. கொடுக்கப்பட்டுள்ள தர அளவுகோல் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் முன்வைக்கப்பட்டது என்றும் கூறுகிறது.

2001 முதல் 2005 வரை,  டச்சு நாட்டின் குடியிருப்புப் பகுதிகளுக்கான தர அளவான 10 மி.கி/கிலோ என்ற நிர்ணயத்தின்படி சுத்தப்படுத்துவதாக யுனிலீவர் கூறியது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய காட்டின் நீரகப் பகுதிக்கு, குடியிருப்புப் பகுதிகளுக்கான தர அளவைப் பின்பற்றக் கூடாது என்று சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சூழல் அமைவினை முறையாக ஆய்வு செய்து அதற்கேற்றாற் போல இன்னும் தீவிரமான தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரினர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுயாதீனமாக ஆய்வு செய்து, பொதுமக்கள் கருத்துக்கேட்பிற்குப் பின்னர் ஒரு தர அளவை நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் கருத்துக்கேட்பை நடத்தாமல், யூனிலீவர் தனது சொந்த ஆலோசகர்களை இதில் ஈடுபடுத்திக் கொள்ள வாரியம் அனுமதித்தது. 2007-ஆம் ஆண்டில், யூனிலீவரின் ஆலோசகரான NEERI, “தொழில்நுட்ப – வணிக அம்சங்களின்” அடிப்படையில், தர அளவை மிக தளர்வாக்கி, 25 மி.கி/கிலோ என்று முன்வைத்தது. “தீவிரமான விதிமுறைகளின் விளைவாகக் கிடைக்கக்கூடிய பலன்களையும், இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்” என்றும் கூறியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்களின் மூலமாக, இந்த ஆய்விற்காக NEERI, 52,000 டாலர்களை ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றது தெரிய வருகிறது. பொது மக்களுக்குத் தெரியாமல், யூனிலீவரும், அதன் ஆலோசகர்களும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கூட்டாகச் சேர்ந்து, சுற்றுச்சூழல் பகுதிக்கான ஒரு கடுமையான தர அளவை முன்வைப்பதற்குப் பதிலாக, குடியிருப்பு பகுதிகளுக்கான ஒரு தளர்வான தர அளவை நிர்ணயித்தனர். யூனிலீவரின் ஆலோசகரான ERM தயார் செய்துள்ள ஒரு விரிவான திட்ட அறிக்கை,பொதுமக்களை இதில் ஒரு பங்கேற்பாளராகக் கூட குறிப்பிடவில்லை.

  1. சுத்திகரிப்பு அளவான 20 – 25 மி.கி./கிலோ,மனித சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான ஒன்றாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று யுனிலீவர் கூறுகிறது.

இந்தத் தர அளவு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. எதிர்காலத்தில் குடியிருப்பில் வசிக்கக்கூடிய குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய இடரைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மனித சுகாதார மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, 20 – 25 மி.கி/கிலோ என்ற அளவை யூனிலீவரின் ஆலோசகர்கள் வந்தடைந்துள்ளனர். இந்த அளவு கூட, பிரிட்டிஷ் கூட்டரசின் குடியிருப்புப் பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்ட 1 மி.கி/ கிலோ என்ற அளவை விடவும், நெதர்லாண்டில், நீடித்த மண் தரத்திற்காக விதிக்கப்பட்ட வரம்பான 0.3 மி.கி/ கிலோவை விடவும்  20 முதல் 25 மடங்கு குறைவானது. எப்படியாயினும், இந்தக் குடியிருப்புக்கான தர அளவுகள், மும்பை அல்லது தில்லி போன்ற நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தத் தொழிற்சாலை, கொடைக்கானல் வன உயிர் காப்பகத்தின் பகுதியாக உள்ள பல்லுயிர் நீரகக் காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட காட்டிலும், மாசுபட்ட தொழிற்சாலையைச் சுற்றி வாழும் குறிப்பிட்ட வன உயிரினங்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டைக் கொண்டே இதைச் சுத்தம் செய்வதற்கான எந்த வரம்பும் நிர்ண்யிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தத் தொழிற்சாலை, தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கான நீரையும் மீன்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனை கேட்ட, மண் உயிரியலாளரான பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில், “பாதரசம், நீர்வாழ்வனவற்றின் உணவுத் தொடர்களில் சேகாரம் ஆகின்றது. கொடைக்கானல் போன்ற பகுதியில்,பாசிகள், பூஞ்சைப் பாசிகள், சிக்காடாஸ் போல கனமான ஓடுகள் கொண்ட முதுகெலும்பிலிகள் ஆகியவற்றில் பாதரசம் அதிக அளவில் காணப்படும். அது ஏற்கனவே சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுவதற்கும், அதைப் புரிந்து கொள்வதற்கும், இது போன்ற உயிரினங்களின் உணவுத் தொடர்களை ஆய்வு செய்தல் மிகவும் அவசியம் ” என்று கூறுகிறார்.

அறிக்கை தயாரிப்பு: The Other Media; Jhatkaa.org; UK Campaign For Justice in Kodaikanal; Chennai Solidarity Group

மேலும் தகவல்களுக்கு : www.kodaimercury.org